Dropbox : அறிந்ததும் அறியாததும்



எம்மில் பலரும் தெரிந்தோ தெரியாமலோ, Cloud Computing உடன் தமது கருமங்களை நாளாந்தம் செய்து கொண்டு தான் இருக்கின்றனர். Cloud Computing பற்றிய புரிதலை கொஞ்சம் விசாலமாக்குவதற்கு கீழ்வரும் காணொளியை அவதானமாகக் கவனியுங்கள்.
Cloud Computing பற்றிய உங்கள் ஐயங்கள் காணொளியைக் கண்டதும், தெளிவாய் பரிவர்த்தனை செய்யப்படலாம்.
Cloud Computing பற்றிய எண்ணக்கருவை நீங்கள் புரிந்திருப்பீர்கள் என நம்புகிறேன். இந்த Cloud Computing இன் பிரயோகங்களாக நாம் அன்றாடம் இணைய நிலைகளில் பாவிக்கும் பல விடயங்கள் காணப்படுகின்றன. அந்த வகையில், எமது கோப்புகளை இணையத்தில் சேமித்து தேவையான நேரத்தில் தேவையான இடத்தில் இலகுவில் பெற்றுக் கொள்ளும் வசதியைத் தருகின்ற Dropbox என்ற இணைய நிலைச் செய்நிரலும் Cloud Computing இன் பிரயோகமாகும்.
குறித்த Dropbox இன் மூலம் கோப்புகளை சேமித்து வைத்தல், பகிர்தல் என்ற செயற்பாடுகளைத் தாண்டியும் பல இன்னோரன்ன நன்மைகள் பெற்றுக் கொள்ள முடியும். அவற்றுள் சிலவற்றை நாம் இந்தப் பதிவில் காண்போம். கூடவே, இந்தச் செய்நிரலின் செயற்றிறனை மேம்படுத்தும் நோக்கோடு இதனோடு சேர்ந்து தொழிற்படும் பல செய்நிரல்களும் காணப்படுகின்றன. இவை Dropbox இன் API ஐப் பயன்படுத்தி உருவாக்கப்பட்டுள்ளன.

அடிப்படை விடயங்கள்

Dropbox ஐ பயன்படுத்தி உங்கள் கோப்புகளை இணைய நிலையில் சேமிக்க முடியும். Windows, Mac OS மற்றும் Linux போன்ற பணிசெயல்முறைமைகளில் இயங்கும் தகவுள்ள செய்நிரல்களையும் Dropbox கொண்டுள்ளதால், வேறுபட்ட OS பற்றிய கவலைகளே தேவையில்லை. அத்தோடு, அதன் இணைய இடைமுகத்தின் மூலம் எந்த இணைய உலாவியைப் (Browser) பயன்படுத்தியும் கோப்புகளை Dropbox கணக்கில் சேர்த்துக் கொள்ள முடிவது சுவை.
இந்த சேவையில் நீங்கள் இணைந்து கொண்டதும், உங்களுக்கு இலவசமாக 2GB அளவுள்ள சேமிப்பகம் வழங்கப்படும். அத்தோடு, இந்த அளவை நீங்கள் அதிகரித்துக் கொள்ள முடியும் என்பதும் கவனிக்கப்பட வேண்டியது. அதுவும் இலவசமாகத்தான். உங்கள் நண்பர்களை Dropbox இல் இணைய அழைப்பதன் மூலம், உங்கள் கணினியை உங்கள் கணக்குடன் இணைப்பதன் மூலம், புதிய கோப்புகளை உங்கள் கணக்கில் சேர்ப்பதன் மூலம் என இலவச சேமிப்புக் கொள்ளளவை பெற்றுக் கொள்வதற்கான சாத்தியங்கள் ஏராளம். நண்பர்களை சேவைக்கு இணைப்பதன் மூலம் 8GB வரையான சேமிப்பு கொள்ளளவை இலவசமாகப் பெற்றுக் கொள்ள முடியுமென Dropbox இனிப்பான செய்தியும் சொல்கிறது.
அத்தோடு, உங்கள் கோப்புகளை நவீன ரக கையடக்கத் தொலைபேசிகளிலிருந்தும் (iPhone) உங்கள் கணக்கிற்கு இணைத்துக் கொள்ள முடியும். அத்தோடு, குறித்த கையடக்கத் தொலைபேசியிலிருந்தே உங்களின் கோப்புகளை பெற்றுக் கொள்ளவும் முடியும்.

காற்றிலே கவிதை

உங்கள் நண்பரிடமிருந்து ஒரு கோப்பைப் பெற்றுக் கொள்ள வேண்டும். அதன் கொள்ளளவோ, மிகப் பெரியது. மின்னஞ்சலில் இணைத்து அனுப்ப முடியாது. இந்த நிலையில் என்ன செய்வீர்கள். அதற்கு இருக்கவே இருக்கிறது AirDropper என்கின்ற Dropbox உடன் சேர்ந்தியங்கும் செய்நிரல்.
இந்தச் சேவையைப் பயன்படுத்தி நீங்கள் குறித்த நண்பரிடம் கோப்பை பெறுவதற்கான தேவை அறிவிக்கலாம். அவரும் குறித்த செய்நிரல் அனுப்பிய இணைப்பின் மூலம் அந்த கோப்பினை உங்கள் கணக்கிற்கு சேர்க்கலாம். அவ்வளவுதான். உங்கள் Dropbox கணக்கில் உங்களுக்குத் தேவையான கோப்பு வந்து சேர்ந்துவிடும். கோப்பு சேர்க்கப்பட்ட செய்தியையும் இனிப்பான மின்னஞ்சலாக AirDropper அறிவிக்கும் என்பது கவிதை.

நீ காப்பாய்!

முக்கியமான கோப்புகளை காத்தல் என்பது எல்லோரும் அதிகம் சிரத்தை கொள்கின்ற விடயந்தான். குறிப்பாக எதிர்பாராத விதமாக கணினி கதிகலங்கிப் போய், செயலற்றுக் கிடக்கின்ற நிலையில், அதிலுள்ள கோப்புகளை பல நேரங்கள் மீள அப்படியே எடுத்துவிடுவது கடினமான காரியமாகும். நேரம் அதிகம் தேவைப்பட்ட வேலையும் கூட.
இப்படியான தருணங்கள் ஏற்படாமல், தடுக்க இறுவட்டுகள் (CD) மற்றும் USB Flash Drive களில் எமது முக்கியமான கோப்புகளை சேமித்து வைப்பது வழக்கமானது. இன்னும் சிலரோ மின்னஞ்சலில் குறித்த கோப்பை சேமித்து வைப்பர். ஆனால், மின்னஞ்சலில் காணப்படுகின்ற கோப்பின் அளவு மற்றும் பண்பு சார்பான வரையறைகள் எல்லா கோப்புகளை மின்னஞ்சலில் சேர்த்து விடுவதற்கு வழி கொடுப்பதில்லை. இதற்கான மிக அழகிய தீர்வு Dropbox தான். Dropbox ஐ நம்பியோர் drop ஆக்கப்படார்!

ஆசையில் ஓர் கடிதம்

சிலவேளைகளில், பெரியளவான கோப்புகளை உங்கள் நண்பர்கள் அல்லது உறவினர்கள் உங்களுக்கு மின்னஞ்சலில் அனுப்பி வைப்பர். அவை மின்னஞ்சலின் சேமிப்பக கொள்ளவை அபகரித்துவிடும். ஆனாலும், அவர்கள் அனுப்பிய அந்த கோப்புகளை வெறுமனே அழித்து குப்பைத் தொட்டிக்குள் போட்டுவிட முடியாது. இந்த நிலையில் என்ன செய்யலாம்.
MailDrop, உங்கள் உறவினர், நண்பர்களின் ஆசையான மின்னஞ்சல்களில் இணைக்கப்பட்ட பெரியளவான கோப்புகளை உங்கள் Dropbox கணக்கிற்கு தன்னியக்கமாகவே மாற்றிவிடும் காரியத்தை செய்துவிடுகிறது. இந்தச் செய்நிரலானது, Windows பணிசெயல் முறைமையில் மட்டுமே தற்போது இயங்குகிறது. ஆனாலும், ஏனைய பணிசெயல்முறைகளுக்கான பதிப்புகளும் வெளிவரும் வெகு தொலைவிலில்லை.

நீதான் என் தேசிய கீதம்

இணையத்தளத்தை உருவாக்குவது, அதனை இணையத்தில் இணைப்பது என்பதெல்லாம் ஒரு காலத்தில் மிகப்பெரிய விடயங்கள். ஆனால், காலச்சக்கரத்தின் வேகமான சுழற்சி எல்லாவற்றையும் ஓரளவிற்கு இலகுவாக்கியிருக்கிறது. வலைப்பதிவுகள் தொடங்க எண்ணிய மாத்திரத்திரலேயே, மிக இலகுவாக அதனை உருவாக்கி அவற்றில் உங்கள் கருத்துகளை சேர்த்துவிட முடியும். இதற்கு துணை புரியும் தளங்களாக, Bloggerமற்றும் WordPress.com தளங்களை குறிப்பாகச் சொல்லலாம்.
ஆனாலும், நீங்கள் ஒவ்வொரு எழுத்தாக அழகு பார்த்து செய்த உங்கள் அழகிய HTML மூலம் செய்யப்பட்ட இணையத்தளம் இணையத்தில் எப்படியிருக்குமென பார்ப்ப வேண்டுமென்றால், குறித்த HTML கோப்புகளை இணையத்தில் எங்கே இலவசமாக சேர்க்கலாம் என்ற கேள்வி எழுகிறதல்லவா?
இந்த விடயத்தை செய்வதை சாத்தியமாக்கும் பல சேவைகள் இணையப்பரப்பில் இருந்தாலும், உங்கள் Dropbox இன் Public Folder ஐ இணையத்தளத்தை சேமித்துவைப்பதற்கான இடமாகப் பயன்படுத்தலாம். Public URL ஐப் பெறுவதன் மூலம், உங்கள் இணையத்தளத்தை சாதாரண இணையத்தளமொன்றைப் போல், உலாவலாம். ஆச்சரியங்கள் தரும் சாத்தியங்களின் ஆரம்பம்தான் இந்த Dropbox. பரீட்சாத்தமாக இணையக் கோப்புகளை பரிசோதனை செய்ய உகந்த இடம்.
இங்கு HTML, JavaScript போன்ற இணைய நிலை மொழிகளை கோப்புகளில் பயன்படுத்த முடியும். ஆனாலும், PHP போன்ற மொழிகளைக் கொண்ட கோப்புகளுக்கான சாத்தியங்கள் Dropbox இல் இணையநிலை பாதுகாப்பு கருத்திற்கொண்டு Enable ஆக்கப்படவில்லை.
இதோ Dropbox இன் Public Folder இல் நான் இணைத்துள்ள மாதிரி HTML எளிய இணையப்பக்கத்தை காணலாம். இணைப்பு
இன்னும் பல சாத்தியங்கள் கொண்ட இந்த Dropbox இன் அழகிய நிலைகள் பற்றி ஆழமாகச் சொல்லவிருக்கிறேன். அதுவரையில், Dropbox சென்று உங்கள் கணக்கை உருவாக்கி, ஆனந்தம் பெருக

நன்றி தாரிக் அஸீஸ் 
http://www.puthunutpam.com/special-feature/things-you-should-know-about-dropbox/

5 கருத்துகள்

  1. அட புதுமையா இருக்கே கட்டாயம் உதவும்...

    பதிலளிநீக்கு
  2. நண்பரே தங்களை வலைச்சரத்தில் அறிமுகம் செய்திருக்கிறேன். நேரம் கிடைத்தால் பார்க்கவும்.
    http://blogintamil.blogspot.com/2011/02/2-thursday-in-valaichcharam-rahim.html

    பதிலளிநீக்கு
  3. @ரஹீம் கஸாலி மிக்க நன்றி நண்பரே

    பதிலளிநீக்கு
  4. நல்ல பதிவு.... தொடந்து உங்கள் பதிவுகளை எதிர் பார்க்கிறோம்.

    பதிலளிநீக்கு
புதியது பழையவை